நுாதனமாக நகை, பணம் 'அபேஸ்': சிதம்பரம் வாலிபர் கைது

பெண்ணாடம்: பெண்ணாடம் மற்றும் திட்டக்குடியில் நகை, பணம் 'அபேஸ்' செய்த சிதம்பரம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகள் மகேஸ்வரி, 24; இறையூரில் உள்ள மெடிக்கலில் வேலை பார்க்கிறார்.

நேற்று முன்தினம் மெடிக்கலுக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க வாலிபர், தன்னை பத்தர் என்றும், உங்கள் மெடிக்கல் உரிமையாளர் உன் கழுத்தில் உள்ள செயின் போன்று செய்ய கூறியதாகவும், அதனை கழட்டி கொடுத்தால் போட்டோ எடுத்துவிட்டு தருகிறேன் என கூறி, மகேஸ்வரியின் ஒன்றரை சவரன் செயினை எடுத்துக் கொண்டு தப்பினார்.

இதேபோன்று, ஆவினங்குடியில் மளிகை கடை ஒன்றில் சில்லரை கொடுப்பதாக்கூறி, கடை உரிமையாளிடம் 5 ஆயிரம் வாங்கி தப்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில், பெண்ணாடம் மற்றும் ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய வாலிபரை தேடி வந்தனர்.

இதற்கிடையே, புவனகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், பெண்ணாடம் பகுதியில் நகை 'அபேஸ்' செய்த வாலிபரின் பைக் என்பதை உறுதிபடுத்தினர். பைக் ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனை பிடித்து பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில், நகை 'அபேஸ்' செய்தவர் சிதம்பரம், கீழ்கரை பகுதியைச் சேர்ந்த சரவணன், 43; என்பதும், இவர், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பதுங்கி இருப்பதாக தெரிவித்தார்.

அதையடுத்து பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் உள்ளிட்ட போலீசார் ஏற்காட்டில் பதுங்கியிருந்த சரவணனை நேற்று கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

Advertisement