ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி: புதுச்சேரியில் பயங்கரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்டோ டிரைவரை ஓட, ஓட விரட்டி கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, உருளையன்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் லுார்துராஜ், 34; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி; மூன்று பிள்ளைகள் உள்ளனர். லுார்துராஜ் நேற்று காலை 6:00 மணியளவில் பைக்கில் வௌியே சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்து, பைக்கில் வந்த 2 பேர், திருவள்ளுவர் சாலை, அருந்தரி நகர் சண்முகா தியேட்டர் அருகே லுார்துராஜை வழிமறித்து கத்தியால் வெட்ட முயன்றனர்.

அதிர்ச்சியடைந்த லுார்துராஜ் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடினார். ஆனால், அவரை ஓட ஓட விரட்டிச் சென்று தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில், லுார்துராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இறந்து விட்டதாக கருதிய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிய லுார்துராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் உள்ள லுார்துராஜிடம், கிழக்கு எஸ்.பி., சுருதி விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவைழக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ஆட்டோ டிரைவரை வெட்டியவர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில், வெட்டப்பட்ட லுார்துராஜ், கடந்த ஆண்டு பெரியார் நகரை சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார். அதில் இருந்து தப்பித்த அந்த ரவுடி, லுார்துராஜை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று நேற்று காலை வீட்டில் இருந்து தனியாக லுார்துராஜ் பைக்கில் வருவதை பார்த்த ரவுடி, தனது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து, லுார்துராஜை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. அதையடுத்து, தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement