வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே அத்துமீறும் சம்பவம்; நயினார் நாகேந்திரன் காட்டம்

7


சென்னை: வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.


@twitter@https://x.com/NainarBJP/status/1959857535160312091twitter

வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?



ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?


'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement