ஜக்தீப் தன்கர் விவகாரத்தில் மர்மத்தை கூட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா; காங்கிரஸ் விமர்சனம்

1

புதுடில்லி: ஜக்தீப் தன்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து, இந்த விவகாரத்தில் மேலும் மர்மத்தை கூட்டியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.




ராஜ்ய சபா நிகழ்வுகளின் போதே தமது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார் சபாநாயகர் ஜக்தீப் தன்கர். அவரது ராஜினாமா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றன. செப்.9ம் தேதி துணை ஜனாபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஜக்தீப் தன்கர் எங்கே? என்ன ஆனார் என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றன.


அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடல்நிலை காரணங்களுக்காகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் தேவையின்றி பிரச்னைகள் எழுப்புகின்றன என்றார்.


இந் நிலையில், அமித் ஷாவின் விளக்கத்திற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து அவர் அளித்துள்ள பதில், அமித் ஷாவின் கருத்து, இந்த விவகாரத்தில் மேலும் பல மர்மங்களை கூட்டி உள்ளது என்றார்.


இது குறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;


2025, ஜூலை 21ம் தேதி இரவு துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். இது முன் எப்போதும் இல்லாத ஒன்று. ஒருநாள் கழித்து, அவரின் உடல்நிலை குணம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்தினார்.


இன்று உள்துறை அமைச்சர் நிறைய சொல்ல வேண்டும் என முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது பேச்சு மேலும் மர்மத்தை அதிகரித்து இருக்கிறது.


இந்த விவகாரத்தில் கண்ணுக்கு தெரியாத விஷயங்கள் நிறைய உள்ளன. விதி முறைகள், உரிமைகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிப்பவராக திகழ்ந்தவர் ஜக்தீப் தன்கர். அவரை முழுமையாக தொடர்பு கொள்ள முடியாததற்கு எந்த விளக்கமும் இல்லை.


இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement