ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை; தமிழக அரசு அறிவிப்பு

19


சென்னை: ''தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்'' என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வருகைக்காக, துறையூர் நகரப்பகுதியில், ஏராளமானோர், திரண்டிருந்தபோது, நேற்றிரவு 7:00 மணியளவில், அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஏற்கனவே, பிரசார கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், நேற்று, மீண்டும் ஆம்புலன்ஸ் வந்ததால், அ.தி.மு.க.,வினர், அந்த வாகனத்தை வழி மறித்தனர்.



உள்ளே, நோயாளி யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்தனர். வேண்டுமென்றே பழனிசாமி கூட்டத்துக்குள் ஆம்புலன்சை ஓட்டி வருவதாக கூறி, டிரைவருடன் தகராறு செய்தனர். விபத்து நடந்ததாக தகவல் வந்ததால், ஆம்புலன்சை கொண்டு செல்வதாக, டிரைவர் தெரிவித்தார். உடனே, போலீசார், அ.தி.மு.க., வினரை விலக்கி விட்டு, வந்த வழியிலேயே ஆம்புலன்சை திருப்பி அனுப்பினர்.


இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) ''தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்'' என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.


மேலும், 'ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்புலன்ஸில் ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையையும் நீதிமன்றத்தில் செலுத்த நேரிடும்' என எச்சரித்துள்ளது.

Advertisement