பீஹாரில் இண்டி கூட்டணி வெற்றியை தடுக்கும் பாஜ: ஸ்டாலின் குற்றச்சாட்டு

53

தர்பங்கா: பீஹாரில் இண்டி கூட்டணி பெற போகும் வெற்றியை கொல்லைப்புறம் வழியாக பாஜ தடுக்க நினைப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

பீஹாரில், இறந்து போனவர்கள், வேறு இடத்துக்கு குடி பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் பெயர் இருந்தவர்கள் என 65 லட்சம் பேரை, வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதை தவறு என்று கூறி, காங்கிரஸ், ஆர்.ஜே.டி., உள்ளிட்ட கட்சிகள் பேரணி நடத்தி வருகின்றனர்.

இன்று பீஹாரில் நடந்த பேரணியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, தமது ஆதரவை தெரிவித்தார். ஸ்டாலின் பேசியதாவது;



உஙகளை பார்ப்பதற்காகவே 2000 கிமீ கடந்து இங்கு வந்துள்ளேன். சமுக நீதி, மதசார்பற்ற அடையாளம் லாலு பிரசாத். பீஹார் என்றால் மரியாதைக்குரிய லாலு பிரசாத் தான் நினைவுக்கு வருவார். கருணாநிதியும், லாலுவும் மிக நெருங்கிய நண்பர்கள்.


எத்தனையோ வழக்குகள், மிரட்டல்களுக்கு பயப்படாமல் அரசியல் செய்ததன் காரணமாக இந்தியாவின் மிக பெரும் தலைவர்களில் ஒருவராக லாலு பிரசாத் உயர்ந்து நிற்கிறார்.


அவரின் வழித்தடத்தில் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்து உழைத்து வருகிறார் தேஜஸ்வி யாதவ். கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பீஹாரைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் பீஹார் மக்களின் பலம், ராகுலின் பலம், தேஜஸ்வியின் பலம்.


இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும் போது எல்லாம், அதற்கான போர்க்குரலை பீஹார் எழுப்பி உள்ளது. இதுதான் வரலாறு.


ஜெயப்பிரகாஷ் நாராயண் ஜனநாயகத்தின் குரலை, சோஷலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக தான் மக்கள் சக்தியை திரட்டினார். அந்த பணியை தான் ராகுல், தேஜஸ்வி யாதவும் இங்கு செய்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கடல் மாதிரி திரண்டு வருகின்றனர். அதிலும் தேஜஸ்வி யாதவ் கார் ஓட்டி அதில் ராகுல் பயணம் செய்த காட்சியை பார்த்தேன். மோட்டார் சைக்கிள் பயணத்தையும் பார்த்தேன்.


உங்களின் நட்பு அரசியல் மட்டும் கிடையாது இரண்டு உடன்பிறப்புகளின் நட்பு. நீங்கள் ஒன்றுசேர்ந்துள்ளீர்கள். பீஹார் தேர்தலில் வெற்றியை பெற்று தரப்போவதே இந்த நட்புதான். பாஜ துரோக அரசியல் தோற்க போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது.


அதனால் தான் இந்த வெற்றியை தடுக்க பார்க்கின்றனர். நியாயமாக முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால் பாஜ கூட்டணி தோற்றுவிடும் என்பதால் தான் மக்களாகிய உங்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கின்றனர்.


தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டனர். 65 லட்சம் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதை விட பயங்கரவாதம் இருக்கமுடியுமா?


எல்லா அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும் அவர்களை முகவரி இல்லாதவர்கள் போல் மாற்றுவது அழித்தொழிப்பு வேலை. ராகுலும், தேஜஸ்வியும் பெறப்போகிற வெற்றியை தடுக்க முடியாமல் கொல்லைப்புறம் வழியாக இந்த வேலையை செய்கிறது.


இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ள அவர்களை வாழ்த்துவதற்காக தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக ராகுல் தேர்தல் ஆணைய மோசடிகளை அம்பலப்படுத்தி இருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தால் முறையான ஒரு பதிலை சொல்ல முடியவில்லை.


ஆனால் ராகுல் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் ஞானேஸ்வர் குமார் சொல்கிறார். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் ராகுல் பயப்படுவாரா? அவர் கண்களிலும், வார்த்தைகளிலும் எப்போதும் பயம் இருக்காது. அரசியலுக்காக, மேடைக்காக அவர் பேசுவது கிடையாது. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்துடன் பேசபவர்.


இப்போது ஏன் பாஜ ராகுல் மீது பாய்கிறார்கள் என்றால், தேர்தல் ஆணையத்தை பாஜ எப்படி கேலிக்கூத்தாகியது என்பதை வெளிக்காட்டியதால் அந்த ஆத்திரத்தில் அவர் மீது பாஜ பாய்கின்றனர். மக்களின் வாக்குரிமையை பறிக்கிற பாஜ அதிகாரத்தை மக்கள் நிச்சயம் பறிப்பார்கள். அதை தான் இந்த கூட்டம் எடுத்துக் காட்டுகிறது.


2024 லோக்சபா தேர்தலில் இண்டி கூட்டணிக்கான அடித்தளத்தை இங்கு பாட்னாவில் தான் அமைத்தோம். பாஜ கர்வத்தை தகர்த்த இடம் தான் இந்த பீஹார். 400 இடம் என்று கனவு கண்டவர்களை 240ல் அடக்கியது இந்த கூட்டணி.


மக்கள் சக்திக்கு முன் எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் பீஹார் நிரூபிக்க வேண்டும். ராகுல் இப்போது இந்தியாவுக்கான வக்கீல். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும், ஜனநாயகம் தழைக்கும்.


மக்கள் சக்திக்கு இணையானது எதுவும் இல்லை என்று தேஜஸ்வி காட்டிவிட்டார். நீங்கள் இருவரும் பீஹாரில் பெறப்போகும் வெற்றி தான் இண்டி கூட்டணி வெற்றிக்கு அடித்தளமாக அமைய போகிறது.


பீஹார் சட்டசபை தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பின்னர் நடைபெறக்கூடிய வெற்றிவிழா கூட்டத்தில் நிச்சயமாக உறுதியாக நானும் பங்கேற்பேன்.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


கூட்டத்தில் ஸ்டாலின் தமிழில் பேசிய பேச்சு, ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement