வரதட்சணை கொடுமையால் 2022ல் மட்டும் 6 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பு!

10


புதுடில்லி: வரதட்சணை கொடுமையால், 2022ல் மட்டும் நாடு முழுவதும் 6 ஆயிரம் பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


உத்தரபிரேச மாநிலத்தின் நொய்டாவில் நிக்கி பாட்டி,26, என்ற பெண்ணும், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த பாருல், 32, என்ற பெண்ணும் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து, 2022ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விபரங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


2022ம் ஆண்டில் 6,000க்கும் அதிகமான பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர். அதே ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கையை விட, இது 25 மடங்கு அதிகமாகும்.

உ.பி., முதலிடம்





அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 2,138 வரதட்சணை கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, பீஹாரில் 1,057 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 518 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 472 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல, தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 442 வரதட்சணை தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. இவை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே.

அதுமட்டுமில்லாமல், தேசிய குற்ற ஆவண தகவலின்படி, 2020ம் ஆண்டு வரை மொத்தம் 60,577 வரதட்சணை மரண வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.


தண்டனை





2022ம் ஆண்டில் விசாரணை நிறைவடைந்த 3,689 வழக்குகளில், 33 சதவீதம் வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெற்றனர்.

வரதட்சணை தடைச் சட்டம், 1961 இன் கீழ், 2018ல் 12,826 வழக்குகளும், 2019ல் 13,307 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 10,366 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 2022 தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, இந்தச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 13,641 பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுகிறது.

Advertisement