அமெரிக்க வரி உயர்வு ஒரு 'பயங்கரவாதம்' : திருப்பூர் இ.கம்யூ., எம்.பி., காட்டம்: பிரதமருக்கு அவசர கடிதம்

திருப்பூர்: 'தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து, பிரதமர் மோடிக்கு, சுப்பராயன் அனுப்பியுள்ள கடிதம்:
அமெரிக்காவின், 50 சதவீத வரி உயர்வால், திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த ஏற்றுமதியில், 35 சதவீத பங்களிப்புள்ள அமெரிக்காவில், அபரிமிதமான வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா, வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் தொகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்பால், திருப்பூருக்கு, ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும்; பொருளாதார ரீதியான பாதிப்பும் ஏற்படும். பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., கொரோனா, நுால் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை, தொழில்துறையினர் வெற்றிகரமாக கடந்து வந்தனர். அமெரிக்க வரி உயர்வு விரைவாக குறைக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில், ஈடுசெய்ய முடியாத அளவுக்கு தொழில்துறையில் நஷ்டம் ஏற்படும்.
மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கான மின்சாரம், போக்குவரத்து செலவுகளை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்க வேண்டும். ஏற்றுமதியாளர்களின் நிதிச்சுமையை குறைக்க, வட்டி மானிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காப்பீடு வாயிலாக, ஏற்றுமதியாளர்களுக்கான மூலதன தேவையை பூர்த்தி செய்ய நிதி உதவி கிடைக்க வேண்டும். அதற்காக, கடன் திட்டங்களைஅறிவிக்க வேண்டும். அமெரிக்காவுக்கு மாற்றாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய உரிய சலுகை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்காவின் வரி உயர்வு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, உலக வர்த்தக அமைப்பை இந்தியா நாட வேண்டும். ஆயத்த ஆடை தொழிலை பாதுகாக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
திமுக அரசின் பேட்ச் வொர்க் போல இல்லை... முதல்வருக்கு அண்ணாமலை பதில்
-
வரதட்சணை மரண வழக்கில் புதிய திருப்பம்: சிலிண்டர் வெடித்ததால் நிக்கிக்கு தீக்காயங்கள்!
-
7 ஆண்டுக்கு பிறகு பயணம்; ஆகஸ்ட் 31ல் சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழக குடும்பம்; 4 பேர் பலியான சோகம்!
-
மாணவர், பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அறிவித்தது அமெரிக்கா
-
ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 2 பேர் மாயம்