ஓணம் பண்டிகைக்காக உற்பத்தியான வெல்லம் தேக்கம்; விலையும் சரிவால் கடும் பாதிப்பு

1

உடுமலை; ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உடுமலை பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் கரும்பு சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில், கரும்பு அரவை செய்து, கொப்பரை வாயிலாக காய்ச்சி, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யும், 35க்கும் மேற்பட்ட கிரசர் ஆலைகள் உள்ளன.

இப்பகுதிகளில், மாதம் தோறும் சராசரியாக, 120 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு, கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை நெருங்கும் நிலையில், கூடுதல் விற்பனையை எதிர்பார்த்து இப்பகுதிகளில் 400 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், கலப்படம், மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 'போலி'யாக வரும் வெல்லம் காரணமாக, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம், கரும்பு சர்க்கரையை கேரளா மற்றும் தமிழக மக்கள் விரும்பும் நிலையில், தாராபுரம், நெய்காரபட்டி பகுதிகளில், ஒரு சிலர் அஸ்கா சர்க்கரையை கலக்கின்றனர்.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து, தரமற்ற கரும்பு சர்க்கரையை வாங்கி, உடன் அஸ்காவை காய்ச்சி கலப்படம் செய்து, செயற்கை நிறமிகள் சேர்த்து, கர்நாடகாவில் உற்பத்தி செய்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.

இதனால், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம், ஓணம் பண்டிகை நெருங்கியும் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.

ஓணம் சீசனுக்கு உற்பத்தி செய்யப்பட்ட, 400 டன் வரை, உருண்டை மற்றும் அச்சு வெல்லம் தேக்கமடைந்துள்ளது. ஒரு சில வியாபாரிகளால், ஒட்டுமொத்த தொழிலும் பாதித்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையினர் முறையாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது.

கடந்தாண்டு ஒணம் பண்டிகையின் போது, கரும்பு, ஒரு டன், ரூ. 3 ஆயிரமாக இருந்தது; 30 கிலோ கொண்ட சிப்பம், ரூ.1,700க்கு விற்றது.

தற்போது, ஒரு டன் கரும்பு, ரூ. 3,900 ஆக விலை உயர்ந்துள்ள நிலையில், ஒரு சிப்பம், 1,400 வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement