வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டது: இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்

59

புதுடில்லி: 'வர்த்தகம் இப்போது ஆயுதமாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி' என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், பிரபல பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தெரிவித்தார்.


ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் காரணத்தால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் 25 சதவீதம், 25 சதவீதம் அபராத வரி என மொத்தம் 50 சதவீத வரியை போட்டு தீட்டி உள்ளார். இந்த 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதாவது: வர்த்தகம், நிதி, முதலீடு இப்போது ஆயுதமாக்கப்பட்டு உள்ளது. இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிகவும் வருத்தம்



அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த அதிக வரிகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. எந்தவொரு ஒற்றை வர்த்தக கூட்டாளியையும் சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் என்பதை இது தெளிவுப்படுத்தி உள்ளது. நாம் எந்தவொரு நாட்டையும் பெரிய அளவில் சார்ந்து இருக்க கூடாது. ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எண்ணெய் கொள்முதல்



இதனால் யார் பயன் அடைகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் கேட்க வேண்டும். சுத்தகரிப்பு நிறுவனங்கள் அதிகப்படியான லாபங்கள் ஈட்டுகின்றன. ஆனால் ஏற்றுமதியாளர்கள் வரிகள் மூலம் அதிக ரூபாயை செலுத்துகின்றனர். நன்மை மிகவும் பெரிதாக இல்லாவிட்டால், இந்த கொள்முதலைத் தொடர வேண்டுமா என்று பரிசீலிப்பது மதிப்புக்குரியது. புவிசார் அரசியல் பிரச்னை இல்லை. எந்த நேரத்திலும் நாம் யாரையும் சார்ந்து இருக்க கூடாது.


@quote@நமது ஏற்றுமதி சந்தைகளை நாம் பன்முகப்படுத்த வேண்டும். சீனா, ஜப்பான், அமெரிக்கா அல்லது வேறு யாருடனும் இணைந்து பணியாற்றுங்கள். ஆனால் அவர்களை சார்ந்து இருக்காதீர்கள். முடிந்தவரை தன்னம்பிக்கை உடன் இருங்கள். மாற்று வழிகள் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். quote

மிகப்பெரிய அடி



அதிக வரிவிதிப்பு இந்தியா- அமெரிக்க உறவுகளுக்கு மிகப்பெரிய அடி. இந்த நடவடிக்கை குறிப்பாக விவசாயிகள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் போன்ற சிறிய ஏற்றுமதியாளர்களை பாதிக்கும். அவர்களது வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தும். இந்த வரி விதிப்பு அமெரிக்க நுகர்வோருக்கும் தீங்கு விளைவிக்கும். அவர்கள் இப்போது 50 சதவீத விலையில் பொருட்களை வாங்குவார்கள். இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

Advertisement