காசு என்னங்க பெரிய காசு; அமெரிக்க யூடியூபரிடம் டிப்ஸ் வாங்க மறுத்த இந்திய டிரைவர்; வீடியோ வைரல்!

18


புதுடில்லி: அமெரிக்க யூடியூபரிடம் ரூ.8500 டிப்ஸ் வாங்க இந்திய டிரைவர் மறுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

உலக சுற்றுப்பயணங்களை நேரடியாக ஒளிபரப்பி வரும் அமெரிக்க யூடியூபர் ஜெய்ஸ்ட்ரீஸி. அவர் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு டிரைவராக இருந்தவரிடம் ஒரு நாளைக்கு டிரைவர் மற்றும் வழிகாட்டி வேலைக்கு எவ்வளவு கட்டணம் என்று கேட்கிறார்.

அதற்கு அவர் 1250 ரூபாய் என்று கூறுகிறார். ஆனால் தான் அவருக்கு சர்ப்ரைஸ் தருவதாக கூறிக்கொண்டு யூடியூபர் 8,500 ரூபாய் கொடுக்கிறார். ஆனால் அந்தத் தொகையை டிரைவர் வாங்க மறுத்து விடுகிறார். பலமுறை வற்புறுத்தி கொடுத்தும் அவர் அதை வாங்க மறுத்து விட்டார். 'இது மிகப்பெரிய தொகை. எனக்கு இவ்வளவு பெரிய தொகை தேவையில்லை' என்று நேர்மையுடன் கூறுகிறார் அந்த டிரைவர்.



தனது நேர்மையால் கவனத்தை ஈர்த்த அந்த டிரைவர் பணத்தை வாங்க மறுக்கும் வீடியோவை அமெரிக்க யூடியூபர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.பெரிய தொகையை தர முயன்ற போது அதிர்ச்சி அடைந்து டிரைவர் வாங்க மறுக்கும் காட்சி, இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.இந்த வீடியோவை பார்வையிட்ட லட்சக்கணக்கான பேர், அந்த டிரைவரின் நேர்மையை பாராட்டி உள்ளனர்.



உழைக்காமல் வரக்கூடிய பணத்துக்கு ஆசைப்படாத இந்த நேர்மை தான் பல்வேறு தரப்பினர் கவனத்தை வீடியோ பெற்றதற்கு காரணம்.

இந்திய டிரைவரின் நேர்மை மற்றும் பணிவைப் பாராட்டி நெட்டிசன்கள் கருத்துகளை குவித்து வருகின்றனர். இப்போதெல்லாம் இது ஒரு அரிய காட்சி. அவருக்குப் பணம் தேவையில்லை என்பதல்ல. ஆனால் அவர் அதை சம்பாதித்ததாக அவர் உணரவில்லை. இதனால் அவர் பணத்தை வாங்க மறுக்கிறார் என சமூகவலைதளத்தில் பயனர்கள் பதிவிட்டனர். இந்த இந்திய டிரைவரின் செயலை பாராட்டி உங்களது கருத்துகளை பதிவிடுங்கள் மக்களே!

Advertisement