மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

மும்பை: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள விரார் கிழக்கில் ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது. இங்கு 4வது மாடியில், நேற்று ஓம்கார்,25, ஆரோஹி,23, தம்பதியினர் தனது ஒரு வயது குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடி கொண்டு இருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, அவரது தாயார் உட்பட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. ஒரு தம்பதியினர் மகிழ்ச்சி பிறந்த நாள் கொண்டாடிய போது இந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.


