84 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பெங்களூரு அணி வெளியிட்ட அறிவிப்பு

பெங்களூரு: ரசிகர்களுக்கு துணை நிற்கவும், பெங்களூரு அணியின் பெருமையை தொடர்வதற்காகவும் புதிய முன்னெடுப்பை பெங்களூரு அணி நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இதனை கொண்டாடும் விதமாக பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியின் போது, ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதனால், கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் மகிழ்ச்சியான தருணம், கருப்பு தினமாக மாறியது.
கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பெங்களூரு அணியே காரணம் என்று கர்நாடகா அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டியது. இது பெங்களூரு அணிக்கு பெரும் சிக்கலை உண்டு பண்ணியுள்ளது.
இதையடுத்து, கடந்த 84 நாட்களாக சமூக வலைதளங்களில் எந்த அறிக்கையையும் வெளியிடாமல் இருந்து வந்த பெங்களூரு அணி நிர்வாகம், தற்போது புதிய முன்னெடுப்பை துவங்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; கடந்த 3 மாதங்களாக நாங்கள் எந்தப் பதிவையும் போடவில்லை. இந்த மவுனம் இல்லாமை என்று பொருள் படாது. அது ஒரு வலி. இந்த இடம் ஆற்றலாலும், நினைவுகளாலும், நீங்கள் மிகவும் ரசித்த தருணங்களாலும் நிரம்பியிருந்தது. ஆனால் ஜூன் 4ம் தேதி அனைத்தையும் மாற்றியது. அந்த நாள் நம் இதயங்களை உடைத்து விட்டது. அன்று முதல் இந்த அமைதி எங்களை ஆக்கிரமித்து விட்டது.
இந்த அமைதியினால், பல விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். அப்படித்தான் உருவானது இந்த அமைப்பு. இது ரசிகர்களுடன் துணை நிற்கவும், அவர்களை கவுரவப்படுத்தவும், ஆறுதல் அளிக்கவும் உருவாக்கப்பட்டது. நாங்கள் இந்த இடத்திற்கு தற்போது அக்கறையுடன் திரும்பியுள்ளோம். விரைவில் முழு விபரங்கள், எனக் குறிப்பிட்டுள்ளது.