யானைகள் அணிவகுப்புடன் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

பாலக்காடு; பாலக்காட்டில், விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் விமரிசையாக நடந்தது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

தாரைக்காடு நீராட்டு கணபதி கோவில், கல்பாத்தி மகா கணபதி கோவில், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில், கொடுவாயூர் ஆலமரத்தடி கணபதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பல்வேறு இடங்களில், ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று மதியம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை தமிழக பா.ஜ. துணைத் தலைவர் குஷ்பு துவக்கி வைத்து பேசினார். கேரள மாநில பா.ஜ. துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், கணேச உற்சவ கமிட்டி தலைவர் மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூன்று யானைகள் அணிவகுப்புடன், மூன்று அடி முதல் 16 அடி வரையிலான, 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டன. பிரசித்தி பெற்ற மள்ளியூர் கணபதி மாதிரியான விநாயகர் சிலை, ஊர்வலத்தில் சிறப்பம்சமாக இருந்தது.

முன்னதாக, பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, விநாயகர் சிலைகள் மூத்தாந்தரை கண்ணகி அம்மன் கோவில் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டன.

அதன்பின், ஊர்வலமானது, பாலக்காடு பெரிய கடை வீதி, பி.ஓ. சி., சாலை, முனிசிபல் பஸ் ஸ்டாண்ட், ஜி.பி., சாலை, சுல்தான்பேட்டை சந்திப்பு, தலைமை தபால் அலுவலகம் சாலை, விக்டோரியா கல்லுாரி சாலை, சின்மயா தபோவன் சந்திப்பு, சேகரிபுரம் வழியாக கல்பாத்தி ஆற்றை அடைந்தது. ஒவ்வொரு சிலையாக ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

@block_B@

தி.மு.க., தலைவர்களுக்கு இருமுகம்!

தமிழக பா.ஜ. துணைத் தலைவர் குஷ்பு பேசும்போது, ''தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க., தலைவர்களுக்கு இருமுகம் உள்ளது. பொதுமக்களிடம் கடவுள் இல்லை என கூறம் அவர்களின் குடும்பத்தினர், கோவில் கோவிலாக சென்று கடவுளை வழிபடுவதை காண்கிறோம். சனாதான தர்மத்துக்கு எதிராக பேசுகின்றனர். இவர்கள் இரட்டை வேடம் போட்டு அரசியலில் செயல்படுகின்றனர். கேரளாவில், பெண்களை கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலக்காடு எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டம், கட்சி பதவியை ராஜினாமா செய்தது மட்டுமின்றி, எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்.block_B

Advertisement