'மனப்பாட கல்வி தேவையில்லை என்ற எண்ணம் தவறானது': தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பேச்சு

1

சென்னை: டாக்டர் ஏ.வி.சீனிவாசன் எழுதிய, 'நினைவாற்றல் நிரந்தரமா' என்ற புத்தகத்தை, தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் வி.ராமசுப்பிரமணியன் வெளியிட்டார்.

சாவித்ரி அறக்கட்டளை சார்பில், டாக்டர் ஏ.வி.சீனிவாசன் எழுதிய, 'தாமரை பிரதர்ஸ் மீடியா' பதிப்பகத்தின், 'நினைவாற்றல் நிரந்தரமா' என்ற தமிழ் மற்றும் ஆங்கில புத்தகம் வெளியீடு நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நேற்று நடந்தது.

நுாலின் முதல் பிரதியை, தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வி.ராமசுப்பிரமணியன் வெளியிட, முதல் பிரதியை ஜவுளி வர்த்தக அதிபர் நல்லிகுப்புசாமி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், வி.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:

பலருக்கு மறதி ஒரு வரம்தான். இறைவன் நம்மை படைத்ததே, நம் துன்பங்களை நாம் மறக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

கவலைகளை நாம் சுமந்தால், நல்ல நினைவாற்றல் இருந்தால், மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நினைவாற்றல், கல்வியை, வீடும், குடும்பமும்தான் ஒருவருக்கு வழங்கியது. மனப்பாடம் செய்யும் கல்வி தேவையில்லை என்ற எண்ணம், 30 ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. என்னை பொறுத்தவரை இது தவறானது. இவ்வாறு அவர் பேசினார்.

'தினமலர்' நாளிதழின் இணை இயக்குனரும், தாமரை பிரதர்ஸ் மீடியா இயக்குனருமான, ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:

இந்த புத்தகத்தில், பல்வேறு கதைகள் சொல்லப்பட்டுள்ளன. குழந்தைகளின் நினைவாற்றலை, பாடல்கள், இசை மற்றும் விளையாட்டு வழியே, எப்படி வளர்க்கலாம் என்றும், புத்தகத்தில் கூறியுள்ளார். எந்த குழந்தைகளும் பிறக்கும்போது, அறிவாளிகளாக பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

இந்த புத்தகம் அறிவியல் மற்றும் நரம்பியல் சிகிச்சை தொடர்பானது மட்டும் கிடையாது. இது, காலத்தால் அழியாத ஞாபகத்தின் கலவை. இது, தாமரை பிரதமர்ஸ் வெளியிட்ட காலத்தால் அழியாத பொக்கிஷம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நரம்பியல் நிபுணர் பாஸ்கரன், நிரோலாக் பெயிண்ட் நிறுவன முன்னாள் பொது மேலாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நுாலாசிரியர் ஏ.வி.சீனிவாசன் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக, சாவித்ரி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜெ.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

Advertisement