பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ தமிழகத்தில் பரவுவது எப்படி? போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'இணையத்தில் பரவிய பெண் வழக்கறிஞரின், அந்தரங்க வீடியோக்களை, முடக்கம் செய்தாலும், தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் பரவி வருகிறது' என, தமிழக காவல்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெண் வழக்கறிஞர் ஒருவர், தன் கல்லுாரி காலத்தில், ஆண் நண்பருடன் காதல் வயப்பட்டார். அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள், புகைப்படங்கள், இணையதளங்களில் பரப்பப்பட்டன. அவற்றை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ''பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள், தமிழகத்தில் இன்னும் மூன்று இணையதளங்களில் பரவி வருகின்றன. புதிதாக ஒரு, 'லிங்க்' எனப்படும், இணைப்பு வாயிலாக பரவி வருகிறது. மொத்தம் நான்கு 'லிங்க்'களில் வீடியோ பரவி வருகின்றன,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'வீடியோக்களை நீக்க உத்தரவிட்ட நிலையில், மும்பை, டில்லி போன்ற இடங்களில், இந்த வீடியோக்களை பார்க்க முடிவதில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் எப்படி மீண்டும் மீண்டும் இணையதளங்களில் பரவி வருகிறது. நல்ல பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், இணையத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. ஆனால் மோசம், ஆபாசமான வீடியோக்கள் மட்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது' என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு, டி.ஜி.பி., தரப்பில் அரசு வழக்கறிஞர் வி.மேகநாதன் ஆஜராகி, ''வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மற்றொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது. அவர் தான் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால், அவரை அடையாளம் காண முடியவில்லை.
வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தயாராக உள்ளது. தடய அறிவியல் துறை அறிக்கைக்கு காத்திருக்கிறோம்,'' என்றார்.
மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.குமரகுரு ஆஜராகி, ''மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமைத்த குழு கூட்டம், செப்.2ல் நடக்க உள்ளது. அடுத்த விசாரணையின் போது, அறிக்கை தாக்கல் செய்ய, அவகாசம் அளிக்க வேண்டும். ஏற்கனவே வழங்கிய 'லிங்க்'குகளில் பரவிய வீடியோக்கள் முடக்கப்பட்டு உள்ளன,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ''இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசு இடையிலான ஒத்துழைப்பை, நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.
ஏனெனில் பாதிக்கப்பட்டவரின் கண்ணியம் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் மீண்டும் பரவி வரும், பெண் வழக்கறிஞரின் வீடியோக்கள் இடம்பெற்ற, நான்கு இணையதள 'லிங்க்'குகளை முடக்க வேண்டும்,'' என உத்தரவிட்டு, விசாரணையை செப்.11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.



மேலும்
-
இந்தியாவை சர்வதேச விளையாட்டு மையமாக மாற்ற நடவடிக்கை; பிரதமர் மோடி
-
பேச்சுவார்த்தைக்கு புடின் கட்டாயம் வர வேண்டும்; அழைக்கிறது ஐரோப்பிய யூனியன்
-
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4 மாதங்களில் இல்லாத உச்சம்
-
அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் தமிழகம் முதலிடம் என முதல்வர் பெருமிதம்: தொழில்துறையில் நாட்டின் வேலைவாய்ப்பு 5.92% உயர்வு
-
சென்னையில் தரவு மையம் 'டெக்னோ' நிறுவனம் துவக்கம்
-
ஓய்வூதிய திட்டங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு உயர்நிலைக்குழு அமைப்பு