முதலைப்பட்டி மாரியம்மன் கோவில் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாமக்கல் :நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி செடல் மாரியம்மன் கோவில் திருவிழாவில், 200 அடி உயரம் கொண்ட மரத்தில் செடல் அலகு குத்தும் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள, முதலைப்பட்டி செடல் மாரியம்மன் கோவிலில், ஆண்டு

தோறும் ஆடி 18 பண்டிகை முடிந்ததும், ஊர்மக்கள் ஒன்று கூடி கோவிலில் பல்லி சகுனம் கேட்பர். அவ்வாறு சகுனம் சொல்லியவுடன் திருவிழா துவங்கும். பல்லி சகுனம் சொல்லாமல், 10 ஆண்டுகள் வரை கூட திருவிழா நடக்காமல் இருந்துள்ளது.
அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் முன் பல்லி சகுனம் கேட்டதும், 19ம் தேதி காப்புக்கட்டியும், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டும் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. கடந்த, 25ல் மாவிளக்கு பூஜை, நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் முதலைப்பட்டி, புதுார், காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு திருவீதி உலா சென்றது.
நேற்று அதிகாலை செடல் எனும் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், 200 அடி உயர செடல் மரத்தில், விரதம் மேற்கொண்ட பட்டக்காரர்கள் பாலகிருஷ்ணன், விஸ்வநாதன், சாமிநாதன் ஆகியோர் முதுகில் ஒருவருக்கு பின் ஒருவராக அலகு குத்தி மூன்று முறை சுற்றப்பட்டது. அதற்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நள்ளிரவில் இருந்து காத்திருந்து செடல் குத்தும் நிகழ்ச்சியை பரவசத்துடன் கண்டு ரசித்தனர். நேற்று காலையில் இருந்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, (29) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

Advertisement