குருவாயூரில் 'இல்லம் நிறை' பூஜை; நெற்கதிருடன் பக்தர்கள் பங்கேற்பு

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேற்று நடந்த 'இல்லம் நிறை' பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில், விவசாயம் செழிக்கவும், மக்களின் வளமான வாழ்க்கைக்காகவும், வயலில் விளையும் நெற்கதிர்களால், 'இல்லம் நிறை' பூஜை நடக்கிறது.

இந்த ஆண்டு பூஜை நேற்று நடந்தது. கோவில் கொடிமரத்தின் அருகே காலை, 11:00 மணி முதல் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நெற்கதிர்களை வாங்கிச் சென்றனர்.

கோவில் தந்திரி பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு மேற்பார்வையில், மேல்சாந்தி பிரஹ்மஸ்ரீ கவபிரா மாறத்து அச்சுதன் நம்பூதிரி தலைமையில் பூஜை நடைபெற்றது. லட்சுமி பூஜைக்கு பிறகு நெற்கதிர்கள் மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், உறுப்பினர் மனோஜ், மேலாளர் பிரமோத் களரிக்கல் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டனர்.

Advertisement