'ஓமன் நாட்டுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்'

புதுடில்லி: ஓமன் நாட்டுடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டில்லியில், தொழில்துறை நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
வளர்ந்த நாடுகளான ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மட்டுமின்றி; மொரீஷியஸ், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நான்கு நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து, சிலி, பெரு, அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக பேச்சு நடைபெற்று வருகிறது. இவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதும், புதிய சந்தைகள், முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படும்.
கத்தாரும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த, பேச்சு நடத்துவதற்கு ஆர்வமாக உள்ளது. பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சில்' வாயிலாக கூட்டாகவும் ஒப்பந்தம் செய்ய சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க, ஒட்டுமொத்த உலக நாடுகளும் விரும்புகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.