இந்திய பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை நம்பியில்லை: தேசிய தென்னை நார் கூட்டமைப்பு கருத்து

பொள்ளாச்சி; ''இந்தியாவின் பொருளாதாரம் அமெரிக்காவை மட்டும் நம்பியில்லை. மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முக்கியத்துவம் தர வேண்டும்,'' என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், கூறியதாவது: தென் அமெரிக்கா நாடுகளான பிரேசில், சிலி, பெரு, கொலம்பியா போன்ற நாடுகள், தென்னை நார் பொருட்களை பற்றி அதிகமாக தெரியாத நாடுகளின் பட்டியலில் உள்ளன. அங்கு இறக்குமதி செய்யப்படும் தென்னை நார் பொருட்கள் மூன்று சதவீதம் மட்டுமே.
அது போலவே, ஐரோப்பிய கண்டத்தில் பல நாடுகளுக்கு தென்னை நார் பொருட்கள் மற்றும் தரைவிரிப்புகள் குறித்து கண்ணோட்டம் இல்லை. அங்கு 62 சதவீதம் பிளாஸ்டிக் தரைவிரிப்புகளை பயன்படுத்துகின்றனர். அந்நாடுகளில், தென்னை நார் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆப்ரிக்க கண்டத்தில், மண்ணில்லா விவசாய முறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தவிர, மேலை நாடுகள் மண்ணில்லா விவசாயம் குறித்து புரிதல் தற்போது ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு, 16க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில், மிக முக்கியமாக ரஷ்யா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் உள்ளடங்கும்.
மத்திய அரசு ஆண்டு ஒன்றுக்கு, 270 வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்று அரங்குக ள் அமைக்க, 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குவது உட்பட பல்வேறு உதவிகளை செய்கிறது.
அதை பயன்படுத்தி, மற்ற நாடுகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய முயற்சிக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதாரம் அமெரிக்காவை மட்டும் நம்பி இல்லை என்பதை உணர்த்தும் காலம் நெருங்கிவிட்டது.
இவ்வாறு கவுதமன் கூறினார்.