கழிவு நீரால் மக்கள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி 3வது வார்டு, சித்தேரிக்கரை பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு நடந்து முடிந்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி பயன்பாட்டில் உள்ளது.
இதில் பிள்ளையார் கோவில் 3 குறுக்கு தெருக்கள், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதியில், 'மேன்ஹோல்' வழியாக சாக்கடை நீர் வழிந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் கழிவுநீர் வழிந்து தேங்குகிறது.
இதனால், அந்த குடியிருப்பு பகுதிகளுக்கு வாகனங்கள் வர முடியவில்லை. பாதாள சாக்கடை சேறும் சகதியுமாக உள்ளதால் வாகனங்கள் சிக்குகிறது. சாக்கடை நீரில் நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.