'வாசிப்பு தானாக வசப்பட்டு விடாது முயற்சி எடுக்கவேண்டும்' கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்துவரும் புத்தக திருவிழாவில், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துக்கொண்டு, வாசிப்பு தானாக வசப்பட்டுவிடாது, அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என பேசினார்.

திண்டுக்கல்லில், மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கிய களம் ஆகியவை இணைந்து 12 வது புத்தக திருவிழாவை அங்கு விலாஸ் பள்ளியில் ஆக., 28 துவங்கி செப்.,7 வரை 11நாட்கள் நடத்துகிறது. அதன்படி, 2ம் நாள் திருவிழாவான நேற்று மாலை நடந்த சிந்தனையரங்கத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துக்கொண்டு வாசிப்பு வசப்படும் எனும் தலைப்பில் பேசுகையில், 'வாசிப்பது முக்கியமல்ல, யாருக்காக வாசிக்கிறோம் என்பது முக்கியம். வாசிப்பு ஒரு இலக்கோடு இருக்கவேண்டும். எப்போதும், ஒரு இயக்கம் அதன் தடத்தை பதித்துவிட்டு வெளியேற வேண்டும். வாசிப்பை தொடர்ந்து நேசிப்பவர்களின் வீடுகளின் மிகப்பெரிய சொத்தே புத்தகங்களாகத்தான் இருக்கும். வாசிப்பை அரசு முன்னெடுத்த மிகப்பெரிய இயக்கம் இல்லம்தேடி கல்வியாக கருதுகிறோம்.

சிறு வயதிலிருந்தே மாணவர்களை வாசிக்க பழக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தோடு இணைந்து 205 புத்தகங்கள் தயாரித்துள்ளோம். அவை, 16 பக்கங்கள், சிறு வாக்கியங்கள் மட்டும் கொண்ட நுழை, நட, ஓடு, பற எனும் பெயர்களில் 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு புத்தகம் தயார் செய்து கொடுத்துள்ளோம். அது மாணவர்களை ஈர்த்தது.

வாசிப்பை துாண்டியது. ஆகவே, வாசிப்பு என்பது தானாக வசப்பட்டுவிடாது. அதை வசப்படுத்த நாம் முயற்சி எடுக்க வேண்டும். டி.வி., செல்போன், அனைத்துவிட்டு குழந்தைகள் முன்பு நாம் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கவேண்டும். நீங்கள் சுகமாக சுமக்கும் சுமைகளாக புத்தகங்கள் இருக்கவேண்டும். வாசிப்பு என்பது ஒரு பண்பாட்டு செயல்' என்றார்.

இதில், கொடைக்கானல் ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு, திண்டுக்கல் இலக்கியக்களம் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement