ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு, நிலச்சரிவு: ஒரே நாளில் 11 பேர் பலி

2


ரம்பன்: ஜம்மு காஷ்மீரின் ரம்பனில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் பெரு வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர்.


ஜம்மு காஷ்மீரில் கடந்த பல நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது. மழையோடு நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.


கதுவா, தோடா, சம்பா, கிஷ்த்வார் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கனமழை,வெள்ள பாதிப்புக்கு தப்பவில்லை. கனமழை மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டு இருக்கும் நிலையில், ரம்பன் மாவட்டத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு உள்ளது.

அங்குள்ள ராஜ்கர் தாலுகாவில் மேகவெடிப்புக்கு 3 பேர் பலியாகி இருக்கின்றனர். அவர்களில் இருவர் பெண்கள். பெரு வெள்ளத்தில் சிக்கி பலியான 3 பேரின் உடல்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர் இறங்கி உள்ளனர். காணாமல் போன 5 பேரை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

ரியாசி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. உள்ளே தூங்கிக் கொண்டு இருந்த நாசிர் அகமது, அவரது மனைவி மற்றும் 5 மகன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்தமாக 11 பேர் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு பலியாகி உள்ளனர்.

பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டரில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழை பாதிப்பில் ஏற்பட்ட சேதாரங்கள் என்ன என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement