மக்களிடம் வரி வசூலிக்காமல் ஆட்சி நடத்திய புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் அமைச்சர் ரகுபதி பெருமிதம்

புதுக்கோட்டை: ''பொதுமக்களிடம் வருமான வரி, விற்பனை வரி, தொழில் வரி என வாங்காமல் ஆட்சி செய்தவர்கள், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள்,'' என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.


புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராகவும் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்த விஜய்ரெகுநாத தொண்டைமானின் நுாற்றாண்டு தொடக்க விழா புதுக்கோட்டையில், நேற்று துவங்கியது.




இதில், அமைச்சர் ரகுபதி, காங்., மூத்த தலைவர் திருநாவுக்கரசர், கார்த்திக் தொண்டைமான், விஜயகுமார் தொண்டைமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


விழாவில், அமைச்சர் ரகுபதி பேசியதாவது:



மழை நீர் வடிகால் வாய்க்கால், கழிவுநீர் செல்ல தனி பாதை, சாலை வசதி, கல்வி வசதி என அனைத்துக்கும் முன்னுதாரணமாக புதுக்கோட்டை சமஸ்தானம் இருந்தது.


நாம் இன்றைக்கு அறிமுகப்படுத்தும் 'வேலைக்கு உணவு திட்டம்' அன்றைய காலத்திலேயே இருந்தது. சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள், மக்களுக்கு வேலையும் வழங்க வேண்டும்; உணவிற்கும் கஷ்டப்படக்கூடாது என கருதி, அந்த திட்டத்தை கொண்டு வந்தனர். அதன்படி, கட்டியவை தான், இன்றைய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டடம் மற்றும் புதுக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகள்.


புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்ததால், அன்றைக்கு வருமான வரி, தொழில் வரி, விற்பனை வரி எதுவும் கிடையாது. எனவே, முக்கிய நிறுவனங்களின் தலைமை புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்தது. மக்களுக்கு எந்தவித வரியையும் போடாமல் ஆட்சி செய்தவர்கள், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள்.




மேலும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினால், வேறு எங்கும் மேல்முறையீடு செய்ய முடியாது. இங்கிலாந்துக்கு தான் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதும் சமஸ்தானத்தின் பெருமை.



அந்த சமஸ்தான மன்னர்களில் ஒருவர் தான் விஜயரெகுநாத தொண்டைமான். அவரது நுாற்றாண்டு துவக்க விழா நடைபெறுகிறது; இறுதி விழா மிகச் சிறப்பாக நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement