நான்கரை மாதத்தில் பிறந்த 580 கிராம் குழந்தை; அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு; வங்கதேச தாய் ஆனந்த கண்ணீர்

1

சென்னை,: வங்கதேச நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு, நான்கரை மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து ஒன்று இறந்த நிலையில், 580 கிராம் எடையிலான மற்றொரு குழந்தைக்கு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள், நான்கரை மாதம் போராடி மறுவாழ்வு அளித்துள்ளனர்.


வங்கதேச நாட்டைச் சேர்ந்த பொரிமோன் சந்துரு - ஷோபா தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் கருத்தரித்தல் மையத்தில் ஷோபா, 32, செயற்கை கருத்தரித்தல் முறையில் கர்ப்பமானார்.




தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், நான்கரை மாதத்தில், ஷோபாவின் கருப்பை சவ்வு விரைவாக கிழிந்ததால், ஏப்., 13ல் இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை பிறக்கும்போதே உயிரிழந்தது; மற்றொரு பெண் குழந்தை, 580 கிராம் எடையில் உயிருடன் பிறந்தது.



இந்த குழந்தை, ஏப்., 15ல், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. நான்கரை மாதம் சிகிச்சைக்கு பின், குழந்தை வளர்ச்சியடைந்து ஆரோக்கியத்துடன் உள்ளது.



இதுகுறித்து, மருத்துவமனையின் இயக்குநர் லட்சுமி, பச்சிளங்குழந்தை பிரிவு பேராசிரியர் முத்துகுமரன் ஆகியோர் கூறியதாவது:



குழந்தை அனுமதிக்கப்பட்டதும் வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன் அளவை சீராக வைக்க, இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.


தொடர்ந்து, 25 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. குழந்தை 580 கிராமில் இருந்ததால்
குடல், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளும் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. சுவாச பாதிப்பு மற்றும் கண் பாதிப்பும் இருந்தது. இதனால், 24 மணி நேரமும் கண்காணிப்பு தொடர்ந்தது.



முதிர்ச்சி அடையாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஏதேனும் ஒரு உடல் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. இக்குழந்தைக்கு அதுபோன்று எவ்வித குறைபாடும் இல்லை. தற்போது குழந்தை, 1.85 கிலோவுடன், நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் உள்ளது. எனினும், குழந்தைக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு அவசியம்.

இதுபோன்ற சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்தால், தினமும் 50,000 ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினருக்கு கட்டணம் என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தைக்கு கவனமாக சிகிச்சை அளித்து, மன அழுத்தத்தில் இருந்த தாயை, சந்தோஷமாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

@quote@ விமானத்தில் பறக்க காத்திருக்கிறோம் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் ஒரு குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தை என்னவாகுமோ என்று தெரியாமல் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். என் குழந்தையை காப்பாற்றி கொடுத்துள்ள மருத்துவ குழுவினருக்கு நன்றி. குழந்தை, 2 கிலோ இருந்தால்தான் விமா னத்தில் செல்ல முடியும். அதனால், மேலும் சில நாட்கள் சென்னையில் தங்க உள்ளோம். - குழந்தையின் தாய் ஷோபாquote

Advertisement