தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறதா: எல்.கே. சுதிஷ் பேட்டி

3

சென்னை; 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொருளாளர் எல். கே. சுதிஷ் கூறி உள்ளார்.



சென்னையில் இன்று நடைபெற்ற ஜி.கே. மூப்பனார் நினைவுநாள் நிகழ்ச்சியில் எல்.கே. சுதிஷ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இபிஎஸ், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக அறிவிக்கவில்லை. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் எல்.கே. சுதிஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்து வந்த அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறதா என்ற கேள்வியை நிருபர்கள் எழுப்பினர்.


அதற்கு எல்.கே. சுதிஷ் அளித்த பதில்;


ஜிகே வாசன், ஜிகே மூப்பனார் குடும்ப நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டு இருக்கிறோம். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. நாங்கள் வந்ததே ஜி.கே. மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தத்தான்.


ஜி.கே. வாசனுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் 40 ஆண்டுகால நட்பு. அரசியலில் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு என்று உண்டு. நட்பு ரீதியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம். இதற்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.


2026ல் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே அமோக வெற்றி பெறும். கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பற்றி எங்களின் பொதுச் செயலாளர் ஏற்கனவே கூறிவிட்டார். நாங்கள் அதை வரவேற்கிறோம்.


யாருடன் கூட்டணி என்பதை பற்றி ஜன.9ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்.


இவ்வாறு எல்.கே.சுதிஷ் பேட்டி அளித்தார்.

Advertisement