நான்காவது சுற்றில் ஜோகோவிச்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 4வது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ், பெலாரசின் சபலென்கா உள்ளிட்டோர் முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரான் நோரி மோதினர். முதுகு வலியால் அவதிப்பட்ட ஜோகோவிச் 6-4, 6-7, 6-2, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 4வது சுற்றுக்குள் நுழைந்தார். இதன்மூலம் யு.எஸ்., ஓபன் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுக்கு முன்னேறிய மூத்த வீரர் (38 வயது) என்ற சாதனையை அமெரிக்காவின் ஜிம்மி கானர்சுடன் (1991) பகிர்ந்து கொண்டார்.
மற்றொரு 3வது சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் லுாசியானோ டார்டெரி மோதினர். வலது முழங்கால் காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடிய அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 3-6, 6-4, 4-6 என பிரான்சின் அட்ரியன் மன்னாரினோவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
சபாஷ் சபலென்கா: பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் சபலென்கா, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் மோதினர். இதில் சபலென்கா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 7-5 என பெலாரசின் விக்டோரியா அசரென்காவை தோற்கடித்தார். கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-1, 6-2 என, பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற 3வது சுற்று போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் தோல்வியடைந்தனர். செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டு வெற்றி பெற்றனர்.
இந்திய ஜோடி வெற்றி
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், விஜய் சுந்தர் பிரஷாந்த் ஜோடி 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன், ஈவன் கிங் ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் ஜோடி 6-3, 6-7, 4-6 என அமெரிக்காவின் வசில் கிர்கோவ், நெதர்லாந்தின் பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
காதல் பரிசு
சபலென்கா (பெலாரஸ்), லெய்லா (கனடா) மோதிய போட்டியின் போது 'கேலரியில்' இருந்த ரசிகர் ஒருவர், தனது காதலை ஏற்றுக் கொண்ட தோழிக்கு மோதிரம் அணிவித்தார். இது, 'மெகா ஸ்கிரீனில்' காண்பிக்கப்பட்டது. ரசிகர்கள், அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
சபலென்கா கூறுகையில், ''நான் விளையாடிய போட்டியில் முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. மிகவும் இனிமையான தருணம். அவர்களது திருமணத்திற்கு வாழ்த்துகள்,'' என்றார்.
மேலும்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்: லாரி -கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
-
மோடியுடன் கருத்து வேறுபாடு: மோகன் பகவத் வெளிப்படை
-
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஓய்வூதியர் மாநாட்டில் வலியுறுத்தல்
-
இலவச மருத்துவ முகாம்
-
சுகுணா கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்
-
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி கே.எப்.சி.சி., அணி வெற்றி