அதிகாலை பயணத்தால் விபரீதம்: லாரி -கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

9


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லாரி -கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.


மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி சென்றனர். அதிகாலை 3 மணிக்கு பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் டிரைவர் மணக்குடி காளீஸ்வரன் 28, ராமநாதபுரம் ஜமுனா 55, ரூபிணி 30 ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கோவிந்தராஜ் (65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.


நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement