பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமன் பதவியேற்பு

19


சென்னை: தமிழக பொறுப்பு டி.ஜி.பி.,யாக ஜி.வெங்கட்ராமன் நேற்று பதவியேற்றார். இந்நிகழ்வில், டி.ஜி.பி., தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்த டி.ஜி.பி., அந்தஸ்து அதிகாரிகள் எட்டு பேர், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்கவில்லை; இது, போலீஸ் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக போலீஸ் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்றார். இவரது ஓய்வுக்கு பின், புதிய சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூத்த அதிகாரிகள் பட்டியல் டி.ஜி.பி., அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது.


அதில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி டி.ஜி.பி., ராஜிவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குனர் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் உட்பட, 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களில் ஒருவர் டி.ஜி.பி.,யாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், தேர்வு நடைமுறைகள் நிறைவடையாததால், டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாக பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றிய வெங்கட்ராமனை, பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 33வது டி.ஜி.பி.,யாக, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் வெங்கட்ராமன் நேற்று பதவியேற்றார்.


ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சங்கர் ஜிவால், வெங்கட் ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, 1994ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். பெரம்பலுார், சேலம், மதுரை, மத்திய புலனாய்வு பிரிவுகளில் முன்பு பணியாற்றியவர்.


பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமனுக்கு, மூத்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். அதேவேளையில் டி.ஜி.பி., தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்த, டி.ஜி.பி., அந்தஸ்து அதிகாரிகள் எட்டு பேர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் தொழில்முதலீடு ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் சென்றுள்ள நிலையில், சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் இந்நடவடிக்கை போலீசில் பரபரப்பாக பேசப்படுகிறது.


@block_G@

சங்கர் ஜிவால் ஏற்க மறுப்பு

பணி ஓய்வு பெறும் டி.ஜி.பி., போன்றோருக்கு, 'ரோப் புல்லிங்' மரியாதை வழங்கப்படும். ஓய்வு பெறும் அதிகாரியை காரில் அமரவைத்து, அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் காரை கயிறு கட்டி இழுத்து செல்வர். இவை அந்த அதிகாரியின் சேவை மற்றும் பங்களிப்பை கவுரவிக்க அளிக்கப்படும் பாரம்பரிய மரியாதை. ஆனால், சங்கர் ஜிவால் இம்மரியாதை வேண்டாம் என கூறிவிட்டார்.block_G

Advertisement