நம்ப வைத்து முதுகில் குத்திய பழனிசாமி பிரேமலதா கொந்தளிப்பு

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில், தே.மு.தி.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பங்கேற்றார்.
கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: கட்சிக்காக பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை, செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் கட்சி வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தோம்.
ஐந்து லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் உறுதி அளித்தனர். சொன்னபடி லோக்சபா தேர்தலில் போட்டியிட ஐந்து சீட் கொடுத்தனரே தவிர, ராஜ்யசபா சீட் தரவில்லை. இப்படி முதுகில் குத்தியவர் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
தேர்தலுக்கு முன் பேசிய பேச்சு, தேர்தலுக்குப் பின் மாறிவிட்டது. முதல்வராக இருந்தவர், கட்சித் தலைவராக கொடுத்த வாக்குறுதிபடி நடப்பார் என நம்பினோம். ஆனால், அவர் அதை செய்யவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில், கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோல், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து ஒப்பந்தம் ஏற்படுத்திய போது, அதில் தேதி குறிப்பிட வேண்டாம் என பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
நாங்களும் ஒப்புக் கொண்டோம். நம்பிக்கை அடிப்படையில் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஆனால், ஏமாற்றப்பட்டு விட்டோம். அதனால் தான், பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்ல மறுக்கின்றனர்; சந்தேகம் கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
@block_B@
பழனிசாமி, தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொண்டிருக்கிறார். போகுமிடமெல்லாம் மக்கள் அலைகடல் என திரளுவதாக ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால், கூட்டப்படும் கூட்டம் காசு கொடுத்து வரவழைக்கும் கூட்டம். இப்படி பல தலைவர்களை, இந்த தமிழகம் ஏற்கனவே பார்த்து விட்டது.
அ.தி.மு.க., மட்டுமல்ல; அனைத்துக் கட்சியினரும் காசு கொடுத்துத்தான் கூட்டத்துக்கு ஆட்களை திரட்டி வருகின்றனர். ஆனால், தே.மு.தி.க.,வில் அப்படி ஒரு நாளும் செய்தது இல்லை; செய்யவும் மாட்டோம். முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் போயுள்ளார்; அவருக்கு வாழ்த்துகள். பயணம் உபயோகமாக இருக்க வேண்டும். பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,block_B







