விநாயகர் சிலை கரைப்பில் இரு தரப்பினர் கடும் மோதல்

ஓசூர்: ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பு விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஊர் மக்கள் சார்பில் ஐந்து சிலைகள், மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் ஒரு சிலை என, ஆறு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

இளைஞர்கள், கோவில் முன் விநாயகர் சிலை ஊர்வலத்தை நிறுத்தி பூஜை செய்ய முயன்றனர். அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இளைஞர்கள் தரப்பை சேர்ந்த தினேஷ், ரமேஷ், சதீஷ், நந்தகுமார், பிரவீன்குமார், விபுன்குமார் என, ஆறு பேரும், ஊர்மக்கள் தரப்பில் பூவரசு, குணா, சுரேந்தர் என, மூவரும் காயமடைந்தனர்.

மற்றொரு தரப்பினர் வைத்திருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால் பெரிய அளவில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.போலீசார் குவிக்கப்பட்டனர். காயமடைந்த ஊர் மக்கள் தரப்பை சேர்ந்த சுரேந்தர் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆபத்தான நிலையில் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இப்பிரச்னையால் இரு தரப்பினரும் விநாயகர் சிலையை கரைக்காமல் விட்டு சென்றனர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல, குமரி மாவட்டம், இருளப்ப புரத்தில், நடந்த விநாயகர் ஊர்வலத்திலும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

Advertisement