அம்பத்துார் சாலையில் மீண்டும் 'மெகா' பள்ளம்

அம்பத்துார்;அம்பத்துார் - கருக்கு பிரதான சாலையில், இரண்டு வாரத்திற்கு முன் 'மெகா' பள்ளம் ஏற்பட்ட நிலையில், நேற்று மீண்டும் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அம்பத்துார், கள்ளிக்குப்பம், புதுார், வெங்கடாபுரம், மேனாம்பேடு உள்ளிட்ட பகுதிகளை, கொரட்டூர் மற்றும் பட்டரைவாக்கத்துடன் இணைக்கும் பிரதான சாலையாக, கருக்கு பிரதான சாலை உள்ளது.

இங்கு, கடந்த மாதம் 17ம் தேதி, 10 அடி அகலத்தில், 15 ஆழத்திற்கு 'மெகா' பள்ளம் ஏற்பட்டது

அந்நேரம், அவ்வழியாக வந்த சரவணன், 34, என்பவர் பைக்குடன் பள்ளத்தில் விழுந்தார். மேலும், ஈச்சர் லாரியின் பின்பக்க சக்கரமும் சிக்கியது.

நான்கு நாட்கள் போராடி அந்த பள்ளத்தை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய ஊழியர்கள் சீர் செய்தனர். இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் அதே சாலையில் மேம்பாலம் அருகே, 10 அடி அகலம், 15 அடி ஆழத்தில், ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கருக்கு பிரதான சாலையில், மீண்டும் போக்குவரத்துக்கு தடை செய்யப் பட்டது.

கருக்கு பிரதான சாலையில், மெகா பள்ளம் விழுந்தபோது, இச்சாலை அடிக்கடி உள்வாங்குகிறது எனவும், சாலையின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் 'தினமலர்' நாளிதழ் சுட்டிக் காட்டியது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் கருக்கு பிரதான சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணமான, சாலைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள பழைய கழிவு நீர் குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து உள்ளது.

Advertisement