நெல் கொள்முதல் விலை உயர்வு போதாது அரசு மீது விவசாய சங்கங்கள் அதிருப்தி

சென்னை:எதிர்பார்த்தபடி நெல் கொள்முதல் விலையை, தமிழக அரசு உயர்த்தாதது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் 83 லட்சம் டன் அளவிற்கு நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அரசின் உணவு தானிய திட்டத்திற்கு, நேரடி கொள்முதல் நிலையங்கள் வழியே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கான நெல் கொள்முதல் பருவம் நேற்று துவங்கியது.
சன்ன ரக நெல் 100 கிலோ 2,545 ரூபாய்; சாதாரண நெல் 2,500 ரூபாய் கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், சன்ன ரகத்திற்கு 156 ரூபாய், சாதாரண ரகத்திற்கு 131 ரூபாய், தமிழக அரசால் ஊக்கத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நெல் கொள்முதல் விலையாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதை நிறைவேற்றும் வகையில், நான்கரை ஆண்டுகளுக்கு பின், இப்போது தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில், இடுபொருட்கள், கூலி, இயந்திர வாடகை உள்ளிட்டவை இரு மடங்கு உயர்ந்து விட்டன.
அவற்றை கணக்கிடும் போது, அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஜெ.ஆஞ்சநேயலு கூறியதாவது:
சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களில், கடந்த ஆண்டு 100 கிலோ விற்கு 3,100 ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டு கூடுதலாக, 160 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. எனவே, தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டும் அளவிற்கு இல்லை.
எல்லாவற்றிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக கூறும் தமிழக அரசு, நெல் கொள்முதல் விலையை, மற்ற மாநிலங்களை விட அதிகமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.