சேதம் அடைந்த மேல்நிலை தொட்டில்களால் அச்சம்; விபரீதம் ஏற்படும் முன் அகற்ற ஏற்பாடு

விருதுநகர் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பல சேதமடைந்த நிலையில் உள்ளன. உள்ளூர் , கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ஊராட்சிகளில் மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நகரங்களுக்கு இணையாக ஊராட்சி பகுதிகளிலும் புதிய புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி வருகின்றனர். கடந்த காலங்களில் ஊருக்கு வெளியே இருந்த மேல்நிலை தொட்டிகளை சுற்றிலும் தற்போது புதியதாக குடியிருப்பு பகுதிகள் உருவாகியுள்ளன.

வீடுகளில் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக திட்டம் தீட்டியது. இதன்படி மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தற்போது ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு புதியதாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பழைய, சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு மாற்றாக புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய மேல்நிலைத் தொட்டி பயன்பாட்டிற்கு வந்த நிலையில் பழைய சேதமடைந்த மேல்நிலைத் தொட்டிகள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ளன. சில சேதமடைந்த மேல்நிலைத் தொட்டிகள் சாலை ஓரங்களிலும், பள்ளிகள் அருகிலும் அமைந்துள்ளது.

தொட்டிகளின் சிமெண்ட் பூச்சி பெயர்ந்த நிலையில் வீசும் காற்றுக்கு திடீரென சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. பல மேல்நிலைத் தொட்டிகளின் துாண்கள் பழுதான நிலையில் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன.

இவற்றின் அடியில் ஆடு, மாடுகள் வளர்ப்பது, ஓய்வு நேரத்தில் குழந்தைகள் விளையாடுவதும் தொடர்கதையாக உள்ளது. சேதமடைந்த மேல்நிலைத் தொட்டிகள் இடிந்து விழுந்தால் உயிர் பலியாகும் அபாயம் உள்ளது. பல ஊராட்சிகளில் போதுமான நிதி வசதி இல்லாத நிலையில் பாதுகாப்பாக தொட்டிகளை அகற்ற முடியாமல் செய்வதறியாது ஊராட்சி அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் தேவையான நிதி ஒதுக்கி ஊராட்சி பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைத் குடிநீர் தொட்டிகளை உயிர் சேதம் ஏற்படும் முன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement