கட்டாய கல்வி உரிமை தொகையை மாநிலங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? கேட்கிறது உச்சநீதிமன்றம்

'கட்டாய கல்வி உரிமைக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றால், மாநில அரசு அந்த தொகையை செலுத்த வேண்டும்' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக,
தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஏழைக் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கட்டாய கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
'தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்கக்கை நடத்தப்படவில்லை' என, ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பதாக தமிழக அரசு வாதிட்டது. இதை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 'மத்திய அரசிடம் இருந்து போதுமான
நிதி கிடைக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளுக்கான கட்டாய கல்வி உரிமைக்கான கட்டணங்களை மாநில அரசு தன் நிதியிலிருந்து வழங்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''கடந்த 2021 -- 22ம் நிதியாண்டில் இருந்து தற்போது வரை கட்டாய கல்வி நிதிக்காக, 153 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது.
அதே நேரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 342 கோடி ரூபாயை இன்னும் விடுவிக்காமல் இருக்கிறது. ஏற்கனவே இதே போன்று நிதி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,'' என, வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது மத்திய அரசு மற்றும் எதிர்மனுதாரரான ஈஸ்வரன் நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -

மேலும்
-
நெல் கொள்முதல் விலை உயர்வு போதாது அரசு மீது விவசாய சங்கங்கள் அதிருப்தி
-
வணிக சிலிண்டர் விலை ரூ.51 குறைந்தது
-
மத்தியில் பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டிகள்; பல சேதமடைந்த நிலையில்
-
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் ரஷ்ய அதிபரிடம் மோடி வலியுறுத்தல்
-
கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., கையில் கோவில்கள்: எச்.ராஜா
-
இன்று இனிதாக..... திண்டுக்கல்