வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: வடக்கு வங்கக்கடலில், இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் கல்லந்திரியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, புதுச்சேரி, 5; மதுரை பெரியபட்டி, சென்னை பெரம்பூர், ஐஸ்ஹவுஸ், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய இடங்களில் தலா, 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வடக்கு வங்கக்கடலில், இன்று புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், வரும் 7ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல், வரும், 5 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடர்பான மாதாந்திர கணிப்பு அறிக்கையை, இந்திய வானிலை துறை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் மாதத்தில், நாடு முழுதும் பருவ மழை இயல்பை விட, 109 சதவீதம் அதிகமாக பெய்யலாம். தமிழகத்தின் வடமாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேசமயம், தென் மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்யும். தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை, செப்டம்பர் மாதத்தில் இயல்பை விட குறைவாகும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement