சந்திரசேகர ராவ் மகள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

12

ஐதராபாத்: பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

பூசல்



ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக காரணமாக இருந்தவர்களில், சந்திரசேகர ராவும் ஒருவர். 2001ல் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை துவங்கிய அவர், தெலுங்கானா உருவானதும், முதல்வராக 2014ல் பதவியேற்று, 2023 வரை பதவியில் நீடித்தார். தேசிய அரசியல் ஆசை ஏற்பட கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றினார். அவருக்கு கேடி ராமாராவ் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். மகன் எம்எல்ஏ ஆக உள்ளார். மகள் எம்எல்சி ஆக உள்ளார்.


மாநிலத்தில் ஆட்சி பறி போன பிறகு கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. சந்திரசேகர ராவ் - அவரது மகள் கவிதா இடையே மோதல் வெடித்தது. பிஆர்எஸ் கட்சியை பாஜ உடன் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் பேச்சுகள் கிளம்பின.

விமர்சனம்



இச்சூழ்நிலையில், கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து கவிதா பேச துவங்கினார். கட்சியின் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். சந்திரசேகர ராவுக்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு கட்சி தலைவர் ஹரிஸ் ராவ் தான் காரணம் என்றார்.

இந்நிலையில், கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.


தெலுங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement