மும்பையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் முடிவுக்கு வந்தது!

16

மும்பை: மும்பையில் நடந்த மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம், 5 நாட்களுக்கு பிறகு இன்று முடிவுக்கு வந்துள்ளது. தம் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர் மனோஜ் ஜாரங்கி இன்று அறிவித்தார்.



கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது மராத்தா சமூகத்தினரின் பல ஆண்டு கோரிக்கையாகும். இதை நிறைவேற்ற கோரி, சமூக ஆர்வலர் மனோஜ் ஜாரங்கி பாட்டீல் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார்.


இவர் தமது ஆதரவாளர்களுடன் ஆசாத் மைதானத்தில் போராட்டத்தை முன்னெடுத்தார். போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், மும்பையில் உள்ள தெருக்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை கைவிட்டு காலி செய்ய வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து, நிபந்தனைகளை மீறியதாக கூறி, மராத்தா போராட்டத்தை தொடர மும்பை போலீஸ் அனுமதி மறுத்தது. மேலும் ஆசாத் மைதான வளாகத்தை விட்டு வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு உத்தரவிட்டது.


ஆனால், நீதி கிடைக்கும் வரை உயிரே போனாலும் மைதானத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று மனோஜ் ஜராங்கே பாட்டீல் திட்டவட்டமாக தெரிவித்தார். இன்று காலை அவர் மேலும் கூறியதாவது;


நீதியையும், கடவுளையும் நாங்கள் நம்புகிறோம். நீதி நிலை நாட்டப்படும் என்று 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மும்பையில் இப்போது எங்கும் போக்குவரத்து இல்லை.


ஆசாத் மைதானத்தில் இருந்து எங்களை வெளியேற்றுவது அரசுக்கு அதிகம் செலவாகும். 2 ஆண்டுகளாக அமைதியாக போராட்டம் நடத்தி வருகிறோம். சட்டத்திற்கு உட்பட்டு போராட்டம் கிடைக்கிறது. கோர்ட் உத்தரவு வந்தவுடன் வாகனங்களை அகற்றி விட்டோம்.


இவ்வாறு மனோஜ் ஜராங்கே பாட்டீல் தெரிவித்தார்.


போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் மும்பை நகரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து நிலைமையை பரிசீலனை செய்த மகாராஷ்டிரா அரசு, இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளது. இதையடுத்து தம் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மனோஜ் ஜாரங்கி செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார். இதனால் 5 நாட்களாக மும்பையில் நீடித்த பதட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement