வெள்ள நீரை சேமித்து வையுங்கள்: பாகிஸ்தான் அமைச்சரின் புது ஐடியா

இஸ்லாமாபாத்: '' வெள்ளத்தை சமாளிக்க, வெள்ள நீரை 'டப்'களிலும், 'கன்டெய்னர்'களிலும் சேமித்து வைக்க வேண்டும், '' என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் தத்தளிப்பதால் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அந்நாட்டு அரசு மீது மக்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. தங்களுக்கு உரிய உதவி கிடைக்கவில்லை எனக்குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம்( ஆக., 31) வரை 854 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இன்னும் மழை தொடர உள்ளதால், இன்னும் பல பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


இந்நிலையில், வெள்ளத்தை எப்படி சமாளிப்பது என்பதற்கு அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் புது ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.


மீடியா ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் வெள்ள நீரை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்த நீரை, வீடுகளில் ' டப்' களிலும், கன்டெயர்னர்களிலும் சேமித்து வைக்க வேண்டும். நீரை கடவுளின் ஆசிர்வாதம் எனக்கருதி அதனை சேமித்து வைக்க வேண்டும்.


விரைவில் பணிகளை முடிக்கும் வகையில் ஏராளமான சிறிய அணைகளை கட்ட வேண்டும். பெரிய அணைகளை கட்ட வேண்டும் என்பதற்காக 10 - 15 ஆண்டுகள் காத்திருக்கக்கூடாது. வெள்ள நீரை வீணாக்கி வருகிறோம். அதனை சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement