வலுவான நிலையில் தமிழகம்

சென்னை: புச்சி பாபு கிரிக்கெட் அரையிறுதியில் தமிழக அணி வலுவான நிலையில் உள்ளது.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. ஜம்மு அண்டு காஷ்மீர் அணிக்கு எதிரான அரையிறுதியில் டி.என்.சி.ஏ., 'லெவன்' அணி, இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 503/7 ரன் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. அம்ப்ரிஷ், 83 ரன்னுக்கு அவுட்டானார். வித்யுத் 37 ரன் எடுத்தார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 567 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.
பின் களமிறங்கிய ஜம்மு அண்டு காஷ்மீர் அணிக்கு அப்துல் சமத் 75 ரன் எடுத்து உதவினார். மூன்றாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 212/4 ரன் எடுத்து, 355 ரன் பின்தங்கி இருந்தது. தமிழகத்தின் வித்யுத் 3 விக்கெட் சாய்த்தார். இன்று கடைசி நாள். தமிழக பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில், பைனலுக்கு முன்னேறலாம்.
வெல்லுமா ஹரியானா
மற்றொரு அரையிறுதி முதல் இன்னிங்சில் ஐதராபாத் 225, ஹரியானா 208 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் ஐதராபாத் அணி 2வது இன்னிங்சில் 49/1 ரன் எடுத்து, 66 ரன் முன்னிலையில் இருந்தது.
நேற்று ஐதராபாத் அணி 254 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வருண் 91 ரன் எடுத்தார். 272 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஹரியானா அணி, மூன்றாவது நாள் முடிவில் 6 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில் இன்று கடைசி நாளில் ஹரியானா வெற்றிக்கு 266 ரன் தேவைப்படுகின்றன.

Advertisement