மிட்சல் ஸ்டார்க் ஓய்வு * சர்வதேச 'டி-20' போட்டியில்...

பிரிஸ்பேன்: சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்து ஸ்டார்க் ஓய்வு பெற்றார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, பிரிமியர் தொடரில் பங்கேற்பார்.
ஆஸ்திரேலிய அணியின் இடது கை 'வேகப்புயல்' மிட்சல் ஸ்டார்க் 35. மணிக்கு 145 கி.மீ., வேகத்தில் பந்துவீசுவார். துல்லிய 'யார்க்கர்', 'பவுன்சர்' வீசுவதில் வல்லவர். 2012ல் 'டி-20' போட்டியில் அறிமுகமானார். 2021ல் ஆஸ்திரேலிய அணி 'டி-20' உலக கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். சர்வதேச 'டி-20' அரங்கில், அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பவுலர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் (65 போட்டி, 79 விக்கெட்) உள்ளார். முதலிடத்தில் ஜாம்பா (103ல் 130 விக்.,) நீடிக்கிறார்.
'காஸ்ட்லி' வீரர்
இந்தியாவின் பிரிமியர் 'டி-20' தொடரில் இவருக்கு மவுசு அதிகம். 2024ல் கோல்கட்டா அணி ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடிக்கு வாங்கியது. கொடுத்த தொகைக்கு பலனாக கோல்கட்டா கோப்பை வெல்ல கைகொடுத்தார். 2025ல் இவரை டில்லி அணி ரூ. 11.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து டில்லி அணிக்காக விளையாடலாம். அடுத்து நடக்க உள்ள உலக கோப்பை (50 ஓவர், 2027), ஆஷஸ் டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு, சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
டெஸ்ட் முக்கியம்
ஸ்டார்க் கூறுகையில்,''பாரம்பரிய டெஸ்ட் போட்டிக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்காக பங்கேற்ற 'டி-20' போட்டிகளின் ஒவ்வொரு நிமிடமும் இனிமையானவை. 2021ல் உலக கோப்பை வென்றது மறக்க முடியாதது. அடுத்து நடக்க உள்ள இந்திய டெஸ்ட் தொடர், ஆஷஸ் தொடர், உலக கோப்பை (2027) போட்டிகளில் பங்கேற்க காத்திருக்கிறேன். இதற்காக உடலை 'பிட்' ஆக வைத்திருக்க வேண்டும். இப்போது ஓய்வை அறிவித்துள்ளதால், 2026ல் நடக்கும் 'டி-20' உலக கோப்பைக்கு தயாராக ஆஸ்திரேலிய பவுலிங் கூட்டணிக்கு போதிய அவகாசம் கிடைக்கும்,''என்றார்.
சர்வதேச 'டி-20' அரங்கில் ஸ்டார்க் ஓய்வு, ஆஸ்திரேலிய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எல்லிஸ், டிவார்ஷியஸ், பார்ட்லட் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கம்மின்ஸ் நீக்கம்
நியூசிலாந்துக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள 'டி-20' தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் இல்லாத நிலையில், ஸ்டாய்னிஸ் வாய்ப்பு பெற்றார். முதுகு பகுதி காயத்தால் அவதிப்படும் பாட் கம்மின்ஸ் இடம் பெறவில்லை. கேப்டனாக மிட்சல் மார்ஷ் நீடிப்பார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில், 'நவ.21ல் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு கம்மின்ஸ் உடல் அளவில் தயாராக வேண்டும். இவருக்கு பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. வரும் அக்.1-நவ.8ல் நடக்க உள்ள நியூசிலாந்து (3 'டி-20'), இந்தியாவுக்கு (3 ஒருநாள் போட்டி, 5 'டி-20') எதிரான தொடர்களில் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்ட ரவுடிகள் உட்பட 6 பேர் கைது
-
பெங்களூரில் கனமழை மண் சரிந்து 2 தொழிலாளி பலி
-
தேசிய விளையாட்டு தின போட்டிகள்
-
ஆக்கிரமிப்பால் சுருங்கும் தெருக்கள் மெயின் பஜாரில் தினமும் நெரிசல் - கூடலுார் நகராட்சியில் நடவடிக்கை எப்போது
-
சதியால் சிக்கிய பேராசிரியர் போக்சோ வழக்கில் விடுதலை
-
சுருக்குமடி வலை தடுக்க கோரி 28 கிராம மீனவர்கள் மறியல்