இந்திய அணி வெற்றி தொடருமா... * இன்று தென் கொரியாவுடன் பலப்பரீட்சை

ராஜ்கிர்: ஆசிய ஹாக்கி 'சூப்பர்-4' சுற்றில் இன்று இந்தியா, தென் கொரிய அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
பீஹாரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, முதல் போட்டியில் சீனா (4-3), அடுத்து ஜப்பானை (3-2) வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் கஜகஸ்தானை 15-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
நான்கு அணிகள்
பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்று, பட்டியலில் 9 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. சீனா (4 புள்ளி) இரண்டாவது இடம் பெற்றது. 'பி' பிரிவில் மலேசியா (9), தென் கொரியா (6) அணிகள் முதல் இரு இடம் பெற்றன. இந்த நான்கு அணிகளும் 'சூப்பர்-4' சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் செப். 7ல் நடக்கவுள்ள பைனலுக்கு முன்னேறும்.
முதல் சவால்
இந்திய அணி, இன்று வலிமையான நடப்பு சாம்பியன் தென் கொரியாவை எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் 100 சதவீத வெற்றி பெற்ற போதும், இந்திய அணி இரு போட்டியில் (சீனா, ஜப்பான்) திணறியது. இருப்பினும் இதுவரை 7 கோல் அடித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அபிஷேக் (4 கோல்), ஜுக்ராஜ் (3), சுக்ஜீத் (3) இந்திய அணிக்கு கோல் அடித்து நம்பிக்கை தரலாம்.
'பெனால்டி கார்னரை' கோலாக மாற்றுவதில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது பயிற்சியாளர் கிரெய்க் உட்பட ரசிகர்களுக்கு நல்ல செய்தி.
மறுபக்கம் தென் கொரியா, மலேசியாவுடன் தோற்ற சோகத்தில் உள்ளது. இத்தொடரில் 5 கோப்பை வென்ற போதும், இம்முறை தடுமாறுகிறது. 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பெற்றது. இங்குள்ள வெயில் காரணமாக வீரர்கள் சோர்வடைந்தனர். 'சூப்பர்-4' போட்டிகள் மின்னொளியில் நடப்பதால் மீண்டு வர முயற்சிக்கலாம். 5 கோல் அடித்த சன் டா இன், யாங் ஜி ஹன் (3) மீண்டும் உதவ உள்ளனர்.
இன்று நடக்கும் மற்றொரு 'சூப்பர்-4' போட்டியில் மலேசியா-சீனா மோத உள்ளன.
மேலும்
-
தொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்ட ரவுடிகள் உட்பட 6 பேர் கைது
-
பெங்களூரில் கனமழை மண் சரிந்து 2 தொழிலாளி பலி
-
தேசிய விளையாட்டு தின போட்டிகள்
-
ஆக்கிரமிப்பால் சுருங்கும் தெருக்கள் மெயின் பஜாரில் தினமும் நெரிசல் - கூடலுார் நகராட்சியில் நடவடிக்கை எப்போது
-
சதியால் சிக்கிய பேராசிரியர் போக்சோ வழக்கில் விடுதலை
-
சுருக்குமடி வலை தடுக்க கோரி 28 கிராம மீனவர்கள் மறியல்