டெல்டாவில் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பி வழியும் 737 ஏரி, குளங்கள்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில், 50 சதவீதத்துக்கு மேல் 737 ஏரி, குளங்கள் நிரம்பின.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 737 ஏரி, குளங்கள் உள்ளன. தஞ்சாவூரில், 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இதுவரை 38 ஏரிகளில் நீர் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 113 ஏரி, குளங்களில் 75 முதல் 100 சதவீதம், 184 ஏரி, குளங்களில் 50 முதல் 70 சதவீதம் வரையில் நீர் நிரம்பி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 170 ஏரிகளில், ஒன்று முழு கொள்ளளவிலும், 62 ஏரிகள் 75 முதல் 100 சதவீதம் வரையிலும், 62 ஏரிகள் 50 முதல் 75 சதவீத அளவில் நீர் நிரம்பி உள்ளன. 45 ஏரி, குளங்களில் 50 சதவீதத்திற்கு குறைவாக நீர் நிரம்பி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 28 ஏரி, குளங்களில் இரண்டு முழு கொள்ளளவிலும், எட்டு ஏரிகள் 75 முதல் 100 சதவீதம், ஒன்பது ஏரிகள் 50 முதல் 75 சதவீதம், ஒன்பது ஏரிகள் 25 முதல் 50 சதவீதம் நீர் தேங்கி உள்ளன. மயிலாடுதுறையில் ஒரு ஏரி முழு கொள்ளளவும், மற்றொரு ஏரி 50 சதவீதத்திற்கு குறைவாக நீர் இருப்பு உள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:



இந்த ஆண்டு, மேட்டூர் அணை நான்கு முறை முழு கொள்ளளவை எட்டியது. அவ்வப்போது டெல்டாவில் பெய்த மழையாலும் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதில், கல்லணை கால்வாய் மற்றும் வெண்ணாறு பாசன ஏரிகளில் 50 சதவீதம் ஏரி, குளங்களில் நீர் நிரம்பியுள்ளது. டெல்டாவில் உள்ள அனைத்து ஏரிகளும் வடகிழக்கு பருவமழையின் போது, முழு கொள்ளளவை எட்டி விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மொத்தம் ஏரி, குளங்கள் - 737, முழு கொள்ளளவு - 6.43 டி.எம்.சி., தற்போது நிரம்பியுள்ள தண்ணீரின் அளவு ஆகஸ்ட் இறுதி வரை - 3.50 டி.எம்.சி.,

'தினமலர்' முயற்சி வீணாக கடலுக்கு பாயும் காவிரி நீர் என்ற தலைப்பில், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்கள் குறித்து விவசாயிகள் கருத்துக்களுடன் 'தினமலர்' நாளிதழில்செய்தி வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகள், நீர் நிலைகளில் நீரை நிரப்ப கவனம் செலுத்தினர். 'தினமலர்' முயற்சிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement