நடைபாதையை ஆக்கிரமித்து கட்டுமானம் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

சென்னை, :ஆர்.ஏ.புரத்தில், நடைபாதையை தடுப்பு வைத்து மறைத்ததுடன், தார் சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் அடுக்கி வைத்துள்ளதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

தேனாம்பேட்டை மண்டலம், 123வது வார்டு, ஆர்.ஏ.புரம், சி.பி.ராமசாமி சாலை, எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

அடையாறில் இருந்து, மந்தைவெளி, அண்ணா சாலை நோக்கி செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆர்.ஏ.புரத்தில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால், பல நேரங்களில் சி.பி.ராமசாமி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது.

ஏற்கனவே, சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன. இதை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ்கள், அடிக்கடி நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.

இந்த சாலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு நுாலகம் இருந்தது. இந்த நுாலகம் மிகவும் சேதமடைந்து இருந்ததால், இதை இடித்துவிட்டு புதிய நுாலகம் கட்ட முடிவு செய்து, சி.எம்.டி.ஏ., நிதியில் இருந்து கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, நடை பாதையை ஆக்கிரமித்து, தடுப்பு வைத்து மறைத்துள்ளதால், பாதசாரிகள் சாலையில் இறங்கி வாகனங்களுக்கு இடையே, ஆபத்தான நிலையில் நடக்க வேண்டி உள்ளது.

அதோடு, கட்டுமான பொருட்களை சாலை யோரம் ஆக்கிரமித்து அடுக்கி வைத்துள்ளனர்.

இத்தகைய சாலை ஆக்கிரமிப்பால், அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் ஒரே திசையில் செல்லும் இடத்தில், ஒரு வாகனம் தான் செல்ல முடிகிறது.

இதனால், நடந்து செல்வோருக்கு வழி இல்லாமல், வாகனங்கள் செல்லும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, நடை பாதையை ஆக்கிரமித்து, மறைத்து வைத்துள்ள தடுப்பு மற்றும் கட்டுமான பொருட்களை அகற்றி, வழி ஏற்படுத்த வேண்டும் என, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement