ஒப்பந்த ஊழியர்கள் 14,000 பேர் ராஜினாமா: சத்தீஸ்கரில் போராட்டம்

9

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, செயல்படும் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் தரமான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தின் கீழ் டாக்டர்கள், நர்சுகள் உட்பட 16,000க்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி, அரசுக்கு எதிராக கடந்த மாதம் 18ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் வெறிச்சோடின. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுடன் அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது.

இதன் முடிவில், அவர்களின் 10 கோரிக்கைகளில், நான்கு கோரிக்கைகளை ஏற்ற அரசு, ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில், போராட்டத்தை முன்னின்று நடத்திய தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் சங்க தலைவர் டாக்டர் அமித்குமார் மிரி, பொதுச்செயலர் கவுஷ்லேஷ் திவாரி உட்பட 25 பேரை, கடந்த 3ம் தேதி மாநில அரசு பணிநீக்கம் செய்தது.

இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள், 14,678 பேர் நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்தனர்.

Advertisement