நரகமாகிப் போன அமெரிக்க நகர வாழ்க்கை

வளமும் வசதியும் நிறைந்த அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனிலும், சிலர் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 28 வயதான ஸ்டெபானி வீடில்லாமல், கென்னடி சென்டர் அருகே ஒரு போம் மேட்ரஸில் ஓய்வெடுத்தபடி இருந்தார். அவரது உலகம் அங்கு இருக்கும் சிலரைப் போலவே சோகத்திலும் தனிமையிலும் மூழ்கியிருந்தது.
ஸ்டெபானியின் நிலை, ஒரு மறைக்கப்பட்ட போராட்டத்தின் சின்னம். வேலைவாய்ப்பு இழப்பு, உயர்ந்துவரும் வீட்டு வாடகை, மனநலப் பிரச்சினைகள், குடும்ப ஆதரவு இல்லாமை - இவை அனைத்தும் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை சிக்கலாக்குகின்றன. நகரின் பிரகாசமான வெளிப்புறங்களும், கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளம் நிறைந்த இடங்களும், இவர்களைப் போன்றவர்களின் வாழ்வியலை மறைத்து விடுகிறது.
வீடற்றோர் பிரச்சினை அமெரிக்காவில் தீவிரமாகி வருகிறது,நாட்டின் கவுரவம் கெடும் என்று வாஷிங்டன், டி.சி.யில் சாலைகளில் தங்குவதை அரசு ஆதரிப்பதில்லை அதையும் மீறி ஆயிரக்கணக்கானோர், சாலைகளில் தங்கியிருப்பதற்காகவே போராடுகிறார்கள். அரசு மற்றும் சமூக அமைப்புகள் உணவு, தற்காலிக முகாம்கள், மருத்துவ உதவிகளை வழங்கினாலும், அது போதவில்லை . சிலர் கடுமையான காலநிலை, பாதுகாப்பின்மை மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாய வாழ்வால் இப்படி இன்னும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஸ்டெபானியின் கதை, நகரில் வாழும் பலரது மறைக்கப்பட்ட வாழ்க்கையின் உண்மை முகமாக இருக்கிறது. இது சமூகத்தின் கவனத்தை படிப்படியாக ஈர்த்து வருகிறது உலகின் கவனத்தையும் பெற்றுவருகிறது. மனிதநேயம், சமூக நீதி மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு குறித்து , அரசு மற்றும் சமூக அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
இந்த புகைப்படம், நகரத்தின் பரபரப்பும் வளமும் பின்னணியில் இருக்கும் போது, ஒரு மனிதன் அல்லது ஒரு பெண் சந்திக்கும் தனிமையும் போராட்டமும் எவ்வளவு கசப்பானதாக இருக்கலாம் என்பதற்கான உதாரணமாகும்.
-எல்.முருகராஜ்


