உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு, திடீர் வாகன சோதனை ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ், கனரக வாகனங்களை நிறுத்தி அதில் 90 டெசிபலுக்கு மேலாக ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் உள்ள ஏர் ஹரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ச்சியாக அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் டெசிபல் மீட்டர் கருவிகளுடன், டோல்கேட்டை கடந்து செல்லும் ஆம்னி பஸ், லாரி, சரக்கு வாகனம் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு வந்த ஆம்னி பஸ் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 9 வாகனங்களில் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து வாகனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 90 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

அப்போது அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், பொது பயன்பாட்டில் உள்ள வாகனங்களில் ஹாரன் சத்தம் கூடுதலாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு புதிதாக டெசிபல் மீட்டர் கருவிகள் வழங்கி செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வாகனங்களில் ஹாரன் ஒலி 90 டெசிபல் அளவில் இருக்க வேண்டும். இதனை கண்டுபிடிக்க, தமிழகம் முழுதும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு 250 கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement