இட ஒதுக்கீடு கேட்டு சிறை நிரப்பும் போராட்டம்

பண்ருட்டி: கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் நேற்று பா.ம.க., தலைவர் அன்புமணி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது, பஸ் நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

என்.எல்.சி., நிர்வாகம் விவசாய நிலங்களை கைப்பற்றுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை. விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், என்.எல்.சி.க்கும், தனியார் நிறுவனத்திற்கும் விவசாய நிலங்களை தாரை வார்க்கிறார்.

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள் என்றால் உங்கள் பிள்ளை, பேரப்பிள்ளைகளை மறந்துவிடுங்கள். ஏனெனில் இந்தியாவில் பஞ்சாப்பில் தான் போதை பழக்கம் அதிகமாக உள்ளது. தற்போது, பஞ்சாப்பை மிஞ்சும் வகையில் தமிழகம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழங்கும் மாநிலமாக தி.மு.க., அரசு நாசப்படுத்தி விட்டது.

கடந்த 2024 எம்.பி., தேர்தலில் தி.மு.க.வை 40க்கு 40 வெற்றி பெற செய்து மிகப்பெரிய தவறை செய்துவிட்டீர்கள். ஆட்சி மாற்றம் வேண்டும். ஆட்சி நிர்வாகம் எது என தி.மு.க.,விற்கு தெரியாது.

முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனில் இருந்து முதலீடு கொண்டு வந்ததாக கூறுகின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் யார் வேண்டுமானாலும் போடலாம். ஏமாற்று வேலை. ஜாதிவாரி கணக்கெடுப்பை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், உள்ளிட்ட மாநிலங்களில் எடுக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் நடத்தாமல் மக்களுக்கு தி.மு.க., துரோகம் செய்து வருகிறது.

வரும் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். துரோகம், ஊழல், கொள்ளை ஆட்சியில் திளைக்கும் கடலுார் மாவட்டத்தில் 9 தொகுதியிலும் தி.மு.க.,வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இன்னும் சில மாதத்தில் நடக்கவுள்ள இட ஒதுக்கீடு கேட்டு சிறை நிரப்பும் போராட்டத்திற்கு பொதுமக்களும், கட்சியினரும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement