ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆர்ப்பாட்டம்

துாத்துக்குடி:மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் உட்பட பல்வேறு தொழிற்சாலைகளை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்' என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் முனீஸ்வரன் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் மணிகண்ட ராஜா, நாகராஜா, விக்டர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பல இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், புதிதாக துவங்கப்பட்டுள்ள கார் தொழிற்சாலைகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கும், துாத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என வழக்கறிஞர் சங்க தலைவர் வாரியார் தெரிவித்துள்ளார்.

Advertisement