குடும்பங்களிடையே மோதல்:சமரசத்துக்கு முயன்றவர் கொலை

பிரேம் நகர்: பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இரு குடும்பங்களிடையே ஏற்பட்ட மோதலில் சமாதானப்படுத்த முயன்ற ஒருவர் கொல்லப்பட்டார்.

பிரேம் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்; பால் பண்ணை உரிமையாளர். கடந்த ஆண்டு ஜனவரியில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமாருக்கு 2.5 லட்ச ரூபாய் கைமாற்றாக கொடுத்துள்ளார்.

இதற்கு அஜய் மற்றும் அவரது தந்தை ஆனந்த் குமார் ஜாமின் கொடுத்துள்ளனர். அதன்பிறகு ராஜ்குமார் மாயமாகி விட்டார். நேற்று முன்தினம் ராஜ்குமாரை கிருஷ்ணகுமார் கண்டுபிடித்தார்.

ஆனந்த்குமார் வீட்டில் பேச்சு நடந்தது. அப்போது சண்டை ஏற்பட்டு, இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான சுனில் குமார், 42, அவரது மனைவி ஆகிய இருவரும் தலையிட்டு, சமாதானம் செய்ய முயன்றனர்.

திடீரென யாரோ செங்கலை எடுத்து வீசியதில், சுனில் குமார் மீது விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்து மகாராஜா அக்ரசென் மருத்துவமனைக்கு சுனில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சுனில் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், அஜய், அவரது தந்தை ஆனந்த் குமார், தாய் சுமித்ரா, அத்தை புஷ்பா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புஷ்பா, சுமித்ரா, ஆனந்த் குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

ஆனந்த் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணகுமார், அவரது மனைவி கீதா தேவி, மகன் ஹிமான்ஷு என்கிற மோனு ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement